புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள் மூலிகை மருந்துகளை பயன்படுத்தினால் அது சிகிச்சையை பாதிக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
மூலிகைகளை அடிப்படையாக கொண்ட சிகிச்சை முறைகள் அல்லது களிம்புகள் புற்றுநோயை குணப்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து பேராசிரியர் மரியா ஜோவா கார்டோசோ ஒரு கருத்தரங்கில் கூறியது இது:
மாற்று சிகிச்சை முறையை மக்கள் நாடுவது இயல்புதான். எனினும், அது மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
புற்று நோய்க்கு அலோபதி மருத்துவ முறைப்படி சிகிச்சை பெறும் நேரத்தில், வேறு எந்த மருத்துவ முறையிலும் சிகிச்சை பெறவோ, மருந்துகள் சாப்பிடவோ கூடாது.
அவ்வாறு செய்தால், ஏற்கனவே பெற்றுவரும் ஹார்மோன் அல்லது கீமோதெரபி சிகிச்சையில் பிரச்சனை உண்டாகும். அதனால் ரத்த உறைவு தாமதமாகி, காயம் குணமடைய காலம் பிடிக்கும்.
ரத்தம் உறைவதை தாமதப்படுத்தும் மூலிகைகளாக மஞ்சள், இஞ்சி, நிலவேம்பு, ஜிங்கோ, ஜின்ஸெங் ஆகியவற்றை குறிப்பிடலாம்.
திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் மற்றும் சில உணவுகளை புற்றுநோயாளிகள் சிகிச்சை காலத்தில் தவிர்க்க வேண்டியது அவசியம்.
இணையத்தில் மூலிகை தயாரிப்புகள் குறித்த பல நிரூபிக்கப்படாத தகவல்கள் இருக்கின்றன. அவற்றின் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுகள் குறைவாக இருப்பதால், தகுதியான நிபுணருடன் பேசி தெரிந்துகொள்ள வேண்டும்.
அதே சமயம், யோகா, தியானம், ரெய்கி, அக்குபஞ்சர் போன்ற சிகிச்சை முறைகள் மருந்துகள் இல்லாதவை என்பதால் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.