பேலியோ டயட்னு சொல்ற கொழுப்பு உணவு பத்தி மறுபடியும் ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கு.
பேலியோவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கணிசமா இருக்கு. அதனால ஒருத்தர் சொல்றதுக்கு இன்னொருத்தர் மறுப்பு சொல்றது வாடிக்கை. விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் இதுக்கு விதிவிலக்கு இல்ல.
லேட்டஸ்டா வெடிச்சிருக்ற விவகாரம் இதான்:
பேலியோ டயட் ஃபாலோ பண்றவங்கள ஆய்வு செஞ்சதுல அவங்க ரத்தத்துல இதயத்தை பாதிக்கக் கூடிய உயிரிகள் இருக்குனு கண்டு பிடிச்சிருக்காங்க.
'European Journal of Nutrition' ல அந்த ஆய்வு முடிவு வந்திருக்கு. பேலியோ டயட் உணவுகள் குடல் பாக்டீரியாக்களை தாக்குதுனு தெரிய வந்திருக்கு. இது எப்டி தெரிஞ்சுதுன்னா, அவங்களோட ரத்தத்தை எடுத்து சோதிச்சப்ப, அதுல ட்ரைமெதிலமைன் ஆக்சைட் (trimethylamine-n-oxide ) அளவு அதிகமா இருந்துது. அதுதான் குடல் பாக்டீரியாக்கள தாக்குதாம். அதனால இதய நோய்கள் வரலாம்னு சொல்றாங்க.
உங்களுக்கு தெரியும். பேலியோ டயட்ல கொழுப்பு ஜாஸ்தியா இருக்ற மட்டன், பச்சை காய்கறி, கடலைகள், முட்டைலாம் தாராளமா சாப்பிடுவாங்க. கொஞ்சம் பழங்கள் சாப்பிடலாம். ஆனா, அரிசி கோதுமை பருப்பு மாதிரியான தானியங்கள், பால், உப்பு, சர்க்கரை , எண்ணெய் அடியோட தொடக்கூடாதும்பாங்க.
"பேலியோ டயட்ல தானியங்கள முற்றிலுமா தவிர்ப்பதுதான் TMAO அதிகமா சுரக்க காரணம்"னு சொல்றார் ஆய்வுக்கு முன்னிலை வகிச்ச டாக்டர் ஜினோனி
இதுதான் நியூஸ்.
இப்போதைக்கு இந்த சர்ச்சை ஓயாது. ஆராய்ச்சினாலே இன்னிக்கு ஒண்ணு சொல்றதும் அடுத்த வாரம் அதுக்கு நேர் மாறா ஒண்ணு சொல்றதும்னு ஆகிப்போச்சு. அத விடுங்க.
பேலியோ டயட்ல இறங்குறவங்க கட்டாயம் இந்த அஞ்சு விதிகள ஃபாலோ பண்ணனும்னு இன்னொரு க்ரூப் கிளம்பிருக்கு.
- Scavenge Your Meat. ஆதி மனுசன் மிருகங்கள வேட்டையாடி கொன்னு தின்னான்; அத நாம ஃபாலோ பண்ணுவோம் அப்டிங்றது பேலியோ தத்துவம். ஆனா, ஆதி மனுசன் தானா ஒண்ணும் வேட்டை ஆடல; வேற எதோ ஒரு மிருகம் கொன்னு போட்ட விலங்கோட டெட் பாடில இருந்து வேணும்ங்றத வெட்டியோ சுரண்டியோதான் எடுத்துகிட்டான்; அதே மாதிரி பேலியோவாசிகளும் பண்ணுங்கோ.
- Cook Your Dinner Over Open Fire. இதுவும் சமைக்க தெரியதுக்கு முன்னாடி ஆதி மனுசன் செஞ்சதுதான். கூட்டமா காட்ல உக்காந்து தீ மூட்டி அதுல மாமிசத்த வாட்றது.
- Eat Your Starches and Veggies. அம்பதாயிரம் வருசத்துக்கு முந்தின மனிதனோட ஆய ஆராய்ஞ்சப்ப, நியாண்டர்தால் மனுசங்க மாமிசம் மட்டுமில்லாம இலை, தளை, காய்னு வெஜிடேரியன் அயிட்டங்களையும் அதோட சேத்து உள்ள தள்ளிருக்காங்கனு தெரிஞ்சுது. செடிகள்ல கிடைக்கக்கூடிய கார்போஹைட்ரேட்ஸ், ஸ்டார்ச் க்ரான்யூல்ஸ் லாம் அதுல இருந்துச்சாம். ஸோ, செடி கொடிகள விடாதீங்க.
- Gorge On Grains. ஒரு தானியமும் ஆகாதுங்றது பேலியோ பாலிசி. ஏன்னா, விவசாயம் ஆரமிச்சே 12,000 வருசந்தான் ஆகுது; வேட்டைக்காரன் காலம் அதுக்கு ரொம்ம்ப முன்னாடினு காரணம் சொல்லுவாங்க. ஆக்சுவலா, 40,000 வருசத்துக்கு முன்ன இருந்த மக்களோட பல்லுல படிஞ்சிருந்த காரையை ஆராய்ஞ்சப்ப, வேக வச்ச தானியங்களோட தடயங்கள் இருந்துதாம். அப்பவே ரொட்டிலாம் சாப்டிருக்கான் மனுசன். அதனால, இப்ப தானியம் சேத்துக்றது தப்பில்ல.
- Eat Sweets Sparingly. பேலியோல ஸ்வீட்டுக்கு தடை கிடையாது. ஏன்னா, வேட்டைக்காரன் இனிப்பு சாப்பிட்டானாம். ஆனா, 14,000 வருசம் முன்னாடி செத்தவங்களோட பல்லு சொத்தையாகி, அதுல குழி தோண்டி தார் வச்சு அடச்சிருந்தது இப்ப தெரிய வந்திருக்கு. இதுக்கு என்ன அர்த்தம்னா, இனிப்பு சாப்ட்டதும் நெசம், பல்லு சொத்தை ஆனதும் நெசம். அதனால, அளவோட ஸ்வீட் எடு, சாப்பிடு.
Mental Floss டாட் காம்ல சாரா லோமன் இந்த அஞ்சு பரிந்துரைகள பதிஞ்சிருக்காங்க.
பேலியோ ஆதரவு, எதிர்ப்பு அணிகள்ட்ட இருந்து அனுபவ அடிப்படையிலான கருத்துகள் வந்தா கைதட்டி வரவேற்போம்.