உடல் பருமன் பெரிய பிரச்னையாக விசுவரூபம் எடுத்துள்ளது.
இதுவரை மேலைநாடுகளை வெகுவாக பாதித்தது இந்த பிரச்னை. இப்போது இந்தியாவை பலமாக தாக்கி இருக்கிறது.
குண்டாக இருப்பதில் பல அசவுகரியங்கள் உண்டு. அனுபவிப்பவர்களுக்கு எடுத்து சொல்ல அவசியம் இல்லை. நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம்.
சுருக்கமாக சொன்னால், வாழ்க்கையை அர்த்தம் இல்லாத போராட்டமாக மாற்றிவிடும் சக்தி கொண்டது உடல் பருமன்.
அநேகமாக குண்டாக இருக்கும் எல்லாருக்கும் இந்த உண்மை தெரிகிறது. அதனால்தான் எப்படியாவது பருமனை குறைக்க துடிக்கிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
உணவு கட்டுப்பாடு + உடல் பயிற்சி மட்டும்தான் பருமனை குறைக்க ஒரே வழி.
அந்த ஒரே வழியில் போக 70 சதவீதம் பேருக்கு விருப்பம் இல்லை. அவர்கள் ஷார்ட் கட் இருக்கிறதா என்று தேடுகிறார்கள்.
அதாவது, நாக்குக்கு ருசியாக எதை வேண்டுமானாலும் சாப்பிடுவேன்; எக்சர்சைஸ் எல்லாம் செய்ய முடியாது. ஆனால் உடல் இளைக்க வேண்டும் என்கிறார்கள் இவர்கள்.
இவர்களை நம்பி பெரிய தொழிலே உருவாகி இருக்கிறது. கத்தி இன்றி ரத்தம் இன்றி புரட்சி என்பார்களே. அதுபோல, உணவு கட்டுப்பாடு இல்லாமல், உடல் பயிற்சியும் செய்யாமல் உடல் பருமனை குறைக்க வழி இதோ என்று ஏகப்பட்ட கம்பெனிகள் விளம்பரம் செய்கின்றன.
இவை விளம்பரம் போல் தெரிவது இல்லை. அழகான கதை போல சொல்கிறார்கள். அதன் முடிவில், ஆமாம் ஆமாம், இது அற்புதமான மருந்து அல்லது மாத்திரை அல்லது சிரப்; நான் பயன்படுத்தி அற்புதமான பலன் அடைந்தேன் என்று பலரும் போட்டோவுடன் கமென்ட் போடுகின்றனர்.
சமூக ஊடகத்தில் வேகமாக பகிரப்படுவதால், சீக்கிரமே லட்சக்கணக்கான வாசகர்களை எட்டுகிறது. அந்த தகவல் அனைத்தையும் அப்படியே நம்பி, ஆயிரக்கணக்கில் உடனே ஆன்லைனில் செலுத்தி ஆர்டர் கொடுக்கின்றனர் இந்தியர்கள்.
ஒவ்வொரு நாளும் இவ்வாறு கோடிக்கணக்கில் அக்கம்பெனிகளுக்கு வருமானம் கொட்டுகிறது.
அரை மணி நேரம் வாசிக்கத்தக்க அளவில் மிக நீளமாக சொல்லப்படும் அந்த விளம்பரக் கதைகளின் முடிவில், உற்றுப் பார்த்தால் மட்டுமே வாசிக்கக் கூடிய சின்னஞ்சிறு எழுத்தில் ஒரு அறிவிப்பு இருக்கும். எவரும் அதை படிப்பதே இல்லை. படித்தால் மருந்துக்கு ஆர்டர் கொடுக்க மாட்டார்கள்.
இதுதான், அந்த அறிவிப்பு:
THIS IS AN ADVERTISEMENT AND NOT AN ACTUAL NEWS ARTICLE, BLOG, OR CONSUMER PROTECTION UPDATE.
All trademarks on this web site whether registered or not, are the property of their respective owners. The authors of this web site are not sponsored by or affiliated with any of the third-party trademark or third party registered trademark owners, and make no representations about them, their owners, their products or services. It is important to note that this site and the stories depicted above is to be considered as an illustrative example of what some individuals have achieved with this/these products. This website and any page on the website, are based loosely off a true story, but has been modified in multiple ways including, but not limited to: the story, the photos, and the comments. Thus, this page, and any page on this website, are not to be taken literally or as a non-fiction story. This page, and the results mentioned on this page, although achievable for some, are not to be construed as the results that you may achieve on the same routine. I UNDERSTAND THIS WEBSITE IS ONLY ILLUSTRATIVE OF WHAT MIGHT BE ACHIEVABLE FROM USING THIS/THESE PRODUCTS, AND THAT THE STORY DEPICTED ABOVE IS NOT TO BE TAKEN LITERALLY. This page receives compensation for clicks on or purchase of products featured on this site. The compensation received may influence the advertising content, topics or posts made in this page. That content, advertising space or post may not always be identified as paid or sponsored content. The owner(s) of this page are compensated to provide opinion on products, services, websites and various other topics. Even though the owner(s) of this page receives compensation for our posts or advertisements, we always give our honest opinions, findings, beliefs, or experiences on those topics or products. The views and opinions expressed on this page are purely that of the owners. Any product claim, statistic, quote or other representation about a product or service should be verified with the manufacturer, provider or party in question.
இதன் சுருக்கமான அர்த்தம் என்ன என்றால், ”மேலே உள்ளது உண்மையான செய்தி அல்ல, வெறும் விளம்பரம்; அதில் சொல்லப்படுவதை நம்பி அந்த பொருளை நீங்கள் வாங்கி பயன்படுத்தி, அதனால் பலன் இல்லாமல் போனாலோ அல்லது வேறு விளைவுகள் ஏற்பட்டாலோ அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம்” என்பதுதான்.
விளம்பரம் மொத்தத்தையும் தமிழிலோ ஏனைய இந்திய மொழிகளிலோ வெளியிடும் நிறுவனம், இந்த எச்சரிக்கையை மட்டும் ஆங்கிலத்தில் மிகச்சிறிய எழுத்தில் வெளியிடுவதன் நோக்கம் என்ன என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இனியாவது ஏமாறாமல் இருங்கள்.