மகிழ்ச்சி உங்கள் கையில்

நான் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் பிறந்து வளர்ந்தவன். மருத்துவம் படிக்கும் காலத்தில் ஏழ்மை, வறுமை, பலவீனம், நோய்கள் எல்லாம் மனிதனை எந்த அளவுக்கு நோயாளியாக மாற்றுகின்றன என்பதை தினம் தினம் பார்த்திருக்கிறேன்.


அமெரிக்காவுக்கு நான் வந்தது 1965ல்தான். நியுயார்க் நகரில் 2 ஆண்டும், வாஷிங்டனில் 6 ஆண்டும் கட்டாய சேவை முடித்தேன். அப்போது கிடைத்த அனுபவம் வித்யாசமானது. இந்தியாவில் பார்த்ததற்கு மாறாக அமெரிக்க நோயாளிகள் உடல் ஆரோக்யத்தோடு இருந்தார்கள். சத்தான உணவு சாப்பிட்டு வளர்ந்ததால் திடகாத்திரமாக தெரிந்தார்கள்.வசதியாகவும் வாழ்ந்தார்கள்.


ஆனாலும் ஒரு விஷயம் அதிர்ச்சி அளித்தது. இந்தியாவில் ஏழ்மையால் கஷ்டப்பட்ட மாதிரி இங்கே இல்லை என்பதால், அமெரிக்கர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதாக நினைத்து கொண்டிருந்தேன். அப்படி இல்லை.


அமெரிக்கர்களும் மகிழ்ச்சியாக இல்லை. கவலை, மன உளைச்சல், பயம், வலி, சோகம் என்று பல வகையான வழிகளில் அவர்களும் துன்பம் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.


அப்போதுதான் மனிதன் கஷ்டம் அனுபவிப்பது ஏன் என்று அடிப்படை அறிவியல் காரணத்தை தேட ஆரம்பித்தேன்.


சராசரி மனிதர்கள் என்ன செய்தால் மன அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும் என்று ஆராய தொடங்கினேன்.


அதில் நான் கண்டு பிடித்த ஒரு பெரிய உண்மை மிகவும் சாதாரணமானது. 'மகிழ்ச்சி என்பது ஒரு பழக்கம்' என்பதுதான் அது.


என்னிடம் வரும் நோயாளிகளை மட்டும் நான் படிக்கவில்லை. ஆயிரத்துக்கு மேலான மாணவர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்களை ஆராய்ந்தேன். மனிதனின் கஷ்டங்கள் அவனாக விரும்பி வரவழைக்கும் விஷயம் அல்ல என்று அப்போது உறுதியாக தெரிந்து கொண்டேன்.


மனிதனின் மனம் எதிலுமே நெகடிவான அம்சத்தை பார்ப்பதற்கு பழக்கப்பட்டு இருக்கிறது. யாரையும் எதையும் நம்பக்கூடாது என்பது காட்டு விலங்குகளுடன் சேர்ந்து மனிதன் வாழ்ந்த காலத்தில் உருவான சிந்தனை.


ஆபத்து எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், யார் மூலமாக வேண்டுமானாலும் வரக்கூடும்; எனவே எந்த நேரமும் உஷாராக இரு; எவரையும் எதனையும் நம்பாதே... என்பது உயிர் பிழைக்க அவசியம் தெரிந்திருக்க வேண்டிய மந்திரமாக அப்போது இருந்துள்ளது.


அந்த சிந்தனை மரபு அணுக்கள் மூலமாக சந்ததிகளுக்கு கடத்தப்பட்டு, இன்னமும் நமது மனதில் புதைந்து கிடக்கிறது. அதனால்தான் எந்த நேரமும் ஒருவித படபடப்பும் அடுத்தது என்ன என்ற பதட்டமும் நம்மை ஆட்கொள்கிறது.


எத்தனை நல்ல விஷயங்கள் நமக்கு நடந்தாலும் சரி. இந்த சிந்தனையின் ஆதிக்கம் குறைவதில்லை. இந்த நல்லது எத்தனை நாள் நீடிக்கும், மற்றவர்கள் நீடிக்க விடுவார்களா என்ற நெகடிவ் எண்ணங்கள் ஆட்டி படைக்கும்.


மூளையும் மனமும் எப்போதும் நம்மை அழுத்தத்திலும் அதிருப்தியிலும் வைத்திருக்கவே படாத பாடு படுகின்றன. இதனால் மகிழ்ச்சி உள்ளே வருவதற்கான வழி சுத்தமாக அடைபட்டு போகிறது.


இதிலிருந்து விடுபட முடியுமா? மகிழ்ச்சியை மனசுக்குள் வரவழைக்க இயலுமா?


முடியும், இயலும் என்பதுதான் நீண்ட ஆராய்ச்சியின் பலனாக நான் கண்டறிந்த உண்மை.


நான் சொல்ல போகும் வழிகளை 10 வாரங்கள் விடாமல் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்கும்.


கவனத்தை ஒருமுக படுத்துங்கள்: மனித மனம் தூக்கத்தில்கூட ஓய்வு எடுக்காமல் நிலை கொள்ளாமல் எப்போதும் அங்குமிங்கும் அலைபாயும் தன்மை கொண்டது என்று மூளை நிபுணர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். இது டிஃபால்ட் மோட் எனலாம். அந்த மோடை மாற்ற வேண்டும். மனதை உங்கள் கன்ட்ரோலில் கொண்டுவர வேண்டும். அதற்காக வாழ்க்கை குறித்த உங்கள் பார்வையை மாற்ற வேண்டும். நெகடிவ் சிந்தனைகளை வலிய ஒதுக்கி தள்ள வேண்டும்.


மோசமான விஷயங்கள் நடக்கும்போதுகூட அதில் மறைந்து கிடக்கும் பாசிடிவான விஷயங்களை மேலே எடுத்து தூக்கி பிடிக்க வேண்டும். எது நடந்தாலும் நல்லதுக்கே என்கிற மனோபாவத்தை வளர்த்து கொண்டால் இது சுலபம்.


காலையில் எழும்போதே, அடடா.. என்ன அழகான காலை பொழுது. இன்னொரு நாள் இந்த உலகின் இன்பங்களை அனுபவிக்க நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கடவுள் (அல்லது இயற்கை) என்று நன்றி சொல்லி பழகுங்கள்.


இயற்கை உண்மையில் அபாரமானது. அதன் அழகு உங்களை சுற்றிலும் மேலேயும் கீழேயும் கொட்டி கிடக்கிறது. ஐந்து புலன்களாலும் அள்ளி பருகுங்கள்.


சக மனிதர்கள் எவரையும் மட்டமாக நினைக்காதீர்கள். எல்லோரிய்டமும் ஏதோ திறமை, சக்தி இருக்கும். உங்களிடமும் குறைகள் இருக்கும். தப்பு கண்டு பிடித்து சொல்லி சொல்லி ஏன் தேவையற்ற கசப்பை வளர்த்து கொள்ள வேண்டும்?


இந்திய யோகா இப்போது உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. அதில் முக்கியமானது மூச்சு பயிற்சி. தியானம் என்றும் சொல்லலாம். அதன் மூலமாக மனதையும் உடலையும் ஒருங்கிணைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை. வெறுமனே உட்கார்ந்து இருக்காமல், உருப்படி இல்லாத விஷயங்களில் நேரத்தை வீண் ஆக்காமல், ஒவ்வொரு நிமிடத்தையும் அர்த்தம் உள்ளதாக மாற்றுங்கள்.


நல்ல புத்தகம் வாசிக்கலாம். நீச்சல் அடிக்கலாம். வாக்கிங் போகலாம். வெயிட் தூக்கலாம். மாடி படிகளில் ஏறி இறங்கலாம். இசை கேட்கலாம் படம் வரையலாம். ஜெபம் பண்ணலாம். ஏதோ ஒன்றை செய்தால் அல்லது எல்லாவற்றையுமே செய்தால் உடலும் மனமும் லேசாகும். பயம், பொறாமை, பேராசை, சுய நலம் போன்ற நெகடிவ் உணர்வுகள் உள்ளே தங்க வழியில்லாமல் போகும்.


பேப்பர், மேகசின், ரேடியோ, டீவி, இன்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று 100 வழிகளில் செய்திகள் நம்மை தாக்குகின்றன. அத்தனை செய்தியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தானா? இல்லை.


ரொம்ப முக்கியம்; தெரிந்து கொண்டால்தான் நல்லது என்கிற மாதிரியான செய்திகளை மட்டும் பாருங்கள். குப்பை சேர்க்க வேண்டாம். ஒரே இடத்தில் உட்கார்ந்து மூழ்கி விடாமல் அவ்வப்போது எழுந்து அங்குமிங்கும் நடங்கள். எளிமைக்கு மாறுங்கள். பழைய ஜோக் என்றாலும் சிரித்து பழகுங்கள்.